Pages

Friday, April 13, 2012

தமிழ் சினிமாவும் நாமும்......

தமிழ்  சினிமா என்பது ஜனரஞ்சகமான, கற்பனையையும் தாண்டிய ஒரு பொன்னுலகம். அதில் நாள்தோறும்  நனைந்து,  நினைந்து, கலந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் கோடான கோடி  ரசிகைகளில்  நானும் ஒருத்தி.........

தமிழ் சினிமா சிறகடிக்க  வைக்கிறது, கிறங்கடிக்க வைக்கிறது,  ஒவ்வொரு முறையும் கண்ணாடி பார்த்து தலை வாரும் போது  என்னையும் ஒரு கதநாயகியாக வாழ  தூண்டுகிறது.  உலகில் உள்ள எல்லாம் அழகான பொருளும்  நானாகிறேன். இந்தக் கற்பனையும் கனவும் எனக்குப் பிடித்திருக்கிறது.    சினிமா பார்ப்பது   எனக்கு  ஒரு கடமை.  வீட்டில் எவ்வளவோ திட்டு வாங்கினாலும் அதை பொருட்படுத்தும் எண்ணமோ, அவர்களின் உணர்வுக்கு  மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமோ இருந்தாலும் அதை தூக்கி விழுங்கிவிட்டு தமிழ் சினிமா என்ற சிங்கம் மட்டும் விழித்துக் கொண்டு என்னை ஆட்டிவைக்கிறது, ஆட்படுத்துகிறது. 

ஒவ்வொரு முறை படம் பார்க்கும் போது, படம் பார்த்தப் பின்னும் இருக்கும் அமைதியும் ஆன்ம திருப்தியும் வேறெதிலும் கிடைக்கவில்லை எனக்கு......
பார்த்து முடித்த படம் முழுக்க பயணம் போகிறேன்.  ஒரு முறை அல்ல பல முறை... பாடப் புத்தகமெங்கும் நானும் என் கதாநாயகனும் கைகோர்த்து, காதலித்து, பாடல் பாடி .... அப்பப்பா அந்த இனிய அனுபவம் மனமெங்கும் தங்கி என்னை தூங்க விடாமல் செய்கிறது.......நாள்ளெல்லாம் அவனோடு பேசிக்கொண்டிருக்கிறேன், அந்த மாய உலகில் உல்லாசமாய் ஊர் சுற்றுகிறேன்.  அடிக்கடி இதழோரம் புன்னகையைப் பூக்கும் வைக்கும் தருணங்களாய் என் கனவு வாழ்வு....   யாருக்கும் தெரியாமல் எனக்கே தெரிந்த ரகசியமானவனாய்  அவன் என் படிப்பறையிலும், பாடப்புத்தகத்திலும், படுக்கையிலும், குளிக்கையிலும், சாப்பிடுகையிலும், பள்ளியிலும், வகுப்பிலும்,எனக்கு மிக பக்கத்தில் அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான்..., சிரிக்கிறான், என் சோகத்தில் அழுகிறான், சிலுமிஷம் செய்கிறான்...  என்னை சந்தோசப்படுத்துகிறான்...

பாடத்தில்  மனம் லயிக்கவில்லை, உணவெதும் உண்ண மனம் நினைக்கவில்லை, பெற்றோர் ஆசிரியர் என யார் பேச்சும் என் செவிகளுக்கெட்டவில்லை......  யார் பேசினாலும் என் கதநாயகன் பேசுவதைப் போல் மனம் எண்ணி பார்க்கிறது,  எல்லோருடைய முகமும் மறைந்து என் நாயகனின் முகமே தெரிகிறது.....   எனக்கே சொந்தமான  அந்த சுகமான உலகத்தில் நானும் நான் பார்த்த படத்தில் வரும் கதாநாயகர்களுமே சஞ்சரிக்கிறோம்...  பாடுகிறோம், ஓடுகிறோம்,  வாழ்கிறோம். இதற்கெல்லாம் அப்பாற் பட்ட ஒரு நிஜ வாழ்க்கையைக் காண, நினைக்க மனம் ஒப்பவில்லை.  அது உண்மையாகவே இருந்தாலும்  எனக்கு இந்த கற்பனை வாழ்வே  பிடித்திருக்கிறது....

சினிமா கண்ணை திறந்தப்படியே கனவு காணச்செய்யும் மாயம்.  சினிமா கிட்டாதென விட்டதெல்லாம்  கனவிலேனும் கற்பனையிலெனும் கிட்டவைக்கும் .  மனதோடு மயக்கம், மயங்க வைக்கும் உலகம். மயங்கி மயங்கி தொலைத்ததெல்லாம்  கணக்கில் இல்லை. கணக்கில் வைத்துக்கொள்ளவும் நினைக்கவில்லை. தொலைந்தது தொலைந்ததாகவே இருக்கட்டும்  என இருப்பதைத் தக்க வைக்க மனம் படாத பாடு படுகிறது!

ஒரு முப்பது  நாற்பது ஆண்டுகளாக, காதலையும்,  அதற்குப்பின் அடி தடி, வன்முறையையும் காட்டும் தமிழ்ச் சினிமாவைக் கருத்தரித்த நாள் முதலாய் பார்த்து கேட்டு வளர்ந்ததால்  வாழ்வு கனவு மயமாகவும் காதல் வயமாகவும் இல்லாமல் கல்வியில் நிலைக்குமா?  அது சினிமா சொந்த புத்தி இல்லையா என்று சுயபுத்தி உள்ள சிங்கங்கள் சீருவது புரிகிறது.  நமது இதிகாசங்களும், உபநிஷத்களும்  எதை நீ பார்க்கிறாயோ அதுவாக நீயாகிறாய்  என்கிறது.  அதை (சினிமாவை) பார்த்து தானே வளர்ந்தேன், வாழ்ந்தேன் நான் எப்படி இருப்பேன் என்பதே என் வாதம்.புத்தியையும், உணர்வையும் ஒரே சமயத்தில் மழுங்கடிக்கும் சினிமாவைத் தோற்கடிக்கும் ஒரு சாதனம் இன்று வரயிலும் இல்லை என்பது உண்மையே....

நல்லவையை மட்டும் பார் என்பது எப்படி ஞாயம்?  நல்லதையும், நல்லவர்களையும் இறுதியில் மட்டும் வாழ வைக்கும் தமிழ்ச் சினிமா, சின்னத்திரை போல், நானும் கடைசியில் திருந்திக்கொள்கிறேன் என்ற வாதம் மட்டும் ஏன் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும், மற்றோருக்கும் பிடிக்கவில்லை?  தமிழ்ச்சினிமாவில் வில்லனுக்கு உள்ள முக்கியத்துவம், அவன் அநியாயத்திற்கு இல்லாத எல்லை, அவன் ஞாயத்தைப் படுத்தும் தொல்லை என 99.9% ஆக்கிரமித்து விடுகிறது. அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் எடுக்கப்படுகிறது இன்று சின்னதிரை நாடகங்கள். அநியாயத்தையும் அட்டூழியத்தையும் காட்டி, காட்டி எதை உணர்த்த முற்படுகிறது  தமிழ்ச்சினிமா?  எதிர்மமான கதாபாத்திரங்களின்( negative charactors) வெற்றியைக் காட்டி நல்லவர்களுக்கு இடமில்லை நீயும் கெட்டவனாய் கேடுகெட்டவனாய் மாறிவிடு எனும் கருத்தை வலியுறுத்தி கூறுவதில் தமிழ்ச்சினிமாவிற்கு ஈடு இணையே இல்லை எனலாம்.  அநியாயமே ஞாயமாய் காட்டும் இந்த தமிழ்ச் சினிமாவையும் விட்டோழிக்க முடியாது, சின்னைத்திரையையும் விட்டோழிக்கவியலாது என்ற பட்சத்தில் தான் இன்றைய சராசரி தமிழ்க் குடும்பங்களின் நிலை. வீட்டுகொரு கணிணியும் தொலைக்காட்சியும் இருக்கும் போது படம் பார்க்கக் கசக்குமா?  புத்திக்குள் வன்முறையையும், காதலையும் விதைத்து அதை விருட்சமாய் வளர்த்த ஒட்டுமொத்த பங்கும் தமிழ்ச் சினிமாவுடையது என்றால் அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவே, மறக்கவோ, முடியாது என்பது என் ஆணித்தரமான கருத்து.

குருதி புனல் நாவலில் இந்திர பார்த்தசாரதி கூறியதை நினைவுறுத்திப் பார்க்கிறேன்,  இதிகாசங்களுக்கும், நன்னெறி கதைகளுக்கும், புராணங்களுக்கும் மனதை வயப்படுத்துகிற வலுவில்லை காரணம்  அவை உள்ளத்தைக் கவர தவறி விடுகின்றன.   ஒன்றை ஆணியடித்தாற் போல் உணர்த்த சிறந்த ஊடகம் தமிழ்ச் சினிமா, ஆனால் நடப்பது என்ன?    

என்னதான் சொல்ல வருகிறேன் என்று  சிந்திக்கிறீகளா?  மண் வளம், நீர் வளம், கனி வளம், இயற்கை வளம் என்றெல்லாம் நமக்கு பேசத்தெரியும் சிந்தனை வளம் பற்றி  நமக்கெதற்கு பேச்சு.?  மன்னிக்கவும்....  ஏதோ ஒரு வேகத்தில் விவேகமின்றி  கதைத்து விட்டேன். உங்களை( தமிழ்ச்சினிமா ரசிகர்களை) காயப்படுத்தி விட்டேன்.


 

ஆறுதல்

ஆறுதல்  சொல்லவியலாத  இழப்பு
அதற்காக வீழ்வதா சிறப்பு?
ஆவதெல்லாம் அழிவதன்றோ இயல்பு
இதை உணர்வதன்றோ  தெளிவு!

போனவரையே நினைத்திருப்பது  அன்பு
போனவர்க்காக இருப்பவரை வதைப்பதும் தவறு
போனவாறோடு வாழ்க்கை முடிந்தால் நிறைவு
பொய்யான வாழ்க்கை முடியாமல் நீள்கிறதே  எதற்கு?

ஆளுக்கொரு வாழ்வு வைத்தான்  நமக்கு
நாளுக்கொரு வேடம் தந்தான்  அதற்கு
ஆடி முடிக்கும் வரை  தொடர்கிறதே கணக்கு
நாமாக வெறுத்தாலும் தீராதவன் தீர்ப்பு!


சோர்ந்து சோர்ந்து அழுவதனால் என்ன பயன்?
சொல்லேதும் கேளாமல் துவழ்வதில் என்ன பலன்?
சென்று மாண்டவரோடு சாவதில் தானா உனது திறன்?
சோகம் ஒரு கோடி வந்தாலும் போராடி வெல்வதன்றோ  நமது கடன்!
 
நாளாக நாளாக காயம் மாறிவிடும்
நாமாக வாழ தினம் வாழ்வு வரும்
நலமாக்க நமக்குமொரு உறவு வரும்
நன்மையே துணை நின்று வரம் தரும்!