
என்னை நீ..
இருந்து வழியனுப்புவாய்
என்று
நம்பியிருந்தேன்
உன்னை வழியனுப்ப நான்...
இந்த தருணங்களை
எழுத எந்த வார்த்தையும்
எனகுதவவில்லை
ஆனாலும் என் பேனா
அசைகிறது
உன் பொருட்டு
என்பேனா!
ஆழ்ந்து நோக்கி
ஓடிய நாள்களைத் தேக்கி
மறந்த ஞாபகங்களை ஆக்கி
உன்னோடு நடந்த
அந்தப் பயணத்தின்
அனுபவத்தை பாக்கி
வைக்காமல்
எழுதுகிறேன்.....
எத்தனையோ காரணங்கள்
இந்த மாற்றத்திற்கு
அத்தனையும் சமாதானங்கள்
ஆவதில்லை எங்களுக்கு.......
இந்த மாற்றத்திற்கான
காரணங்களை
தப்புத் தப்பாய்
எண்ணி இருக்கையிலே
நீ காய் நகற்ற வேண்டிய தருணம்
உன் நீண்ட மெளனத்தின் பின்னே
என் கவனம்....
சில காலமாய்
வெற்றி தரும் சுகத்தை விட
பிறர் தோல்வியில்
சுகம் காணும் குரூரம்
காய் நகர்ந்ததை
நானும் உணர்கிறேன்......
புத்தனையும் காந்தியையும் கூட
குற்றம் சொன்ன தேசமிது
சுத்தமற்ற உள்ளங்களை
மொத்தம் கொண்ட வையமிது
நித்தம் நித்தம்
நினைக்கையிலே
புத்தி கூட மாறி போகும்
சக்தியெல்லாம் மீறி போகும்
எல்லோருக்கும் நல்லவனாய்
இருந்து விடலாகாது
எல்லோருக்கும் தீயவனாய்
இருந்து விடக்கூடாது...
உனக்கு நீ யார்?
உணர்ந்து பார்
உண்மை புரியும்
உணர்ந்தால் தேர்..........
விரலைத் தாண்டி வளரும் போது
நகத்தை நறுக்குவது போல்
அவர்களைத் தாண்டி
வேகத்தைக் கூட்டி
நடை போடு
என்று சொன்னதெல்லாம்
நீ தானே அன்று......
என்றும்
காய்க்கும் மரம் தானே கல்லடி படும்
ஆக்கும் கரம் தானே சொல்லடி படும்
தயங்காதே தங்கமே
கலங்காதே சிங்கமே
நடை போடு வீரமாய்
உயர்ந்திடு சிகரமாய்
சிற்பியாகவும்
சிலையாகவும்
உனக்கு நானும்
எனக்கு நீயும் இருந்து
நம்மை நாமே செதுக்கிய
அதிசயம்
என்றுமே அது
நிரந்தரம்.....
உன்னால்
பயன் பெற்றவர் பட்டியலில்
நான் இல்லை..
என்னால் பயன் பெற்றவர்
இங்கு யாரில்லை?
பயன் பெற்றவரும் உன்னை
பல நாள் காயப்படுத்தியதைக்
கண்டேன்.....
நீ விலகாததையும்
கண்டேன்
காயப்படுத்தியது உன் கவனத்தில் இல்லையா?
நீ கவனிக்கவே இல்லையா?
எந்த தருணத்தில்
எந்த நிமிடத்தில்
நீ என்னிடமிருந்து
விலக்கினாய்.......
பல நாள் இந்த கேள்வி
என்னை காயப்படுத்தியுள்ளது...
நாம் தோழிகளாய் இருந்தது
பலருக்கு உறுத்தல்
பிரித்தார்கள் - பின்பு
அவர்களே பிரிந்தார்கள்......
பாகுபடுத்திப் பார்க்க
உனக்குத் தெரியாது
வேறுபடுத்திக் கொள்ள
எனக்குப் பிடிக்காது.......
ஒரு நாள் இருவரும்
ஒரே காரில் பயணம் போகிறோம்
மெளனம் உடைக்காத நீயும்
மெளனம் காக்காத நானும்
வாய் மூடிக் கொள்கிறோம்
ஏதோ கேட்க தவித்து
அதை தவிர்த்து நீயும்...
ஏதோ சொல்ல துடித்து
அதை விழுங்கிய நானும்....
பயணம் நிறைவடைகிறது
நயனம் நனைகிறது
சொல்லாத அந்த
தருணம்
நமது நட்பின் விரிசலை உறுதிப்படுத்தியது....?????
அடித்துக் கொண்டதுண்டு
வாய் வார்த்தைகளில்
கடித்துக் கொண்டதுண்டு
பெண்கள் அதிகமாய்
பணிபுரியும்
இடமெல்லாம் வம்பு வளரும்
என்ற அவச்சொல்லைத் துடைக்க
பிரச்சனைகளைக் களைய
நீ எடுத்த முடிவெல்லாம்
விடை தந்ததுண்டு....
அந்த சமயோசிதம்
சமாதானம் தந்து நம்மிடம்........
முத்துலெட்சுமி எனும் பெயருக்கு
இத்தனை சக்தியா..?
பள்ளியில்
அத்தனை
உள்ளத்தையும் கலங்கடித்த
வெற்றியா?
அன்று
முத்து என்றழைத்தோம்..
இன்று
சொத்திழந்து நின்றோம்...
முத்தாக எங்கள் சொத்தாக
இருந்த உங்களை விட்டாக வேண்டும்
என்ற தருணம் வெறும் கட்டு
கதையாகக் கூடாதா?
என்று நிதம் மனதோடு சலனம்....
தேசிய மொழியின்
வீழ்ச்சியை
உயர்த்திய
தீரத்தையும்
பேசிய வார்த்தைகள்
வீழ்த்திய போது
வீரத்தையும்
அனைவரையும்
அரவணைத்த
நேசத்தையும்...
அதிரடியாய் பரிசு தந்த
பாசத்தையும்
அடிக்கடி திட்டமிடும்
வேகத்தையும்
மிச்சமிருந்தால்
சொல்லி விடுங்கள்.....
நுரைத்துக் கொண்டும்
முறைத்துக் கொண்டும்
கரையைத் தேடி வரும்
அலையாய் வாழ்க்கை பயணம்
கரையிலேயே ஒதுங்கி விட
முடியாதென்று அலை அறியாதா..?
கரையைத் தழுவிச் செல்லும்
பல பொழுதும்...
கரையை உடைத்துக் கொல்லும்
ஒரு பொழுதும்....
நகர்ந்து கொண்டே
தானிருக்கிறது..
அடித்துக் கொள்வதால்
என்னைத் தொடாதே
என்று கரையும் ஒதுங்கி
ஓய்ந்து நிற்கவில்லை ;
இடம் தராத கரையைச் சேரமாட்டேன்
என்று அலையும்
நினைப்பதாகது எப்போதும்
இதுதான் வாழ்க்கை இப்போதும்...
மனங்களை வசப்படுத்தும்
முயற்சியில் முயன்று முயன்று
வசப்படுத்தவும் முடியாமல்
வசப்படவும் இயலாமல்
வாழ்க்கை...
சின்ன சின்னதாய்
மனஸ்தாபங்கள்
சன்ன சன்னமாய் வந்தாலும்
எண்ணி எண்ணி அதனையெல்லாம்
மன்னித்த மனதுக்கொரு நன்றி
புண்படுத்தியே இருந்தாலும்
பண்படுத்தியே உள்ளீர்கள்
அந்த பெருந்தன்மைக்கொரு நன்றி
உயிர்பிக்கும் நிமிடங்கள்
சமர்பிக்கும் உண்மைகள்
கசக்கும்....
விழி நீரில் ஆட
வாய் வார்த்தைக் கூடா
வாராமல் போகும்.............
இந்த நிமிடங்களில்
விழியோரம் நனைந்தாலும்
மனசெல்லாம் வலித்தாலும்
மெளனித்து உன்னை
வழியனுப்பவே விரும்புகிறேன்.....
வரும் நாளில்
வந்த நாளை மறந்தாலும்
பிரிவின் ரணங்களில்
பிறக்கும் மாற்றத்தில்
எதிர்காலம் உன்னை
எதிர்கொண்டழைக்க
நலமாய் வளமாய் வாழ
ஆயிரம் வாழ்த்துகள்
எங்கள் சார்பில்............