Pages

Thursday, August 4, 2011

மெளனமாய்............






உனது
தீர்க்கமான பார்வை
எனக்குள்
தீராத வலியாய்
தீயாய் சுடுகிறது....

உனது
நீண்ட நேர
கனமான மெளனம்
இதயத்தில் இடியாய்
இறங்கி உடைக்கிறது....

உனது
அன்பான ஆதரவான
பார்வை
அலையாய் எழுந்து
புயலாய் வீசுகிறது....

காதல் என்று
சொல்ல வந்த தருணமெல்லாம்
தள்ளி நின்று
தள்ளி சென்று
என் தவிப்பை
தகிக்க வைக்கிறாய்...

நீ என்னை
அழுத்தமாய் பார்த்து
அமைதியாய் நகைப்பாய்
இதழோரம் தவளும்
இனிதான நகைப்பில்- என்
இரவெல்லாம் விழித்து
என்னை கொல்லும்...

சொல்ல வந்ததை
சொல்லவும் முடியாமல்..
சொல்லி விடவும் இயலாமல்...
நரக வேதனையில் நான்

சொல்ல நினைப்பதை
சொல்ல மறுத்து
காதல் இல்லை என மறைத்து
நிதம் தொல்லை செய்யும் நீ

கண்ணில் தெரியும் காதலை
மண்ணில் புதைக்க நீயும்
கையில் வைத்த இதயத்தை
பொய்யில் மறைக்கும் நானுமாய்
நாம் மெளனத்தில் நிறைகிறோம்..........

Sunday, July 31, 2011

வரம்


என்னை சுற்றி கவிதைகள்
வாசிக்க முயலாமல் நான்....

என்னை சுற்றி வண்ண மலர்கள்
வண்ணமில்லாமல் நான்.......

என்னை சுற்றி விண்மீன் கூட்டங்கள்
வெற்று வானமாய் நான்....

என்னை சுற்றி பேசும் சித்திரங்கள்
பேசா மடந்தயாய் நான்

என்னை சுற்றி அசைந்தாடும் மரங்கள்
வெறும் மரக்கட்டையாய் நான்....

என்னை சுற்றி ஏகாந்தம்
எதையும் கவனிக்காமல் நான்...

என்னை சுற்றி இயங்கும் உலகம்
இயக்கமில்லாமல் நான்...

என்னை சுற்றி தேவதைகள்
ஊனப்பட்டவளாய் நான்.....

என்னை சுற்றி ஒளிவட்டம்
ஓர் ஓரம் தேடி ஒளிந்து கொள்ளும் நான்.........

பாலை வனம் போல் நான்
சோலை வனமாய் வாழ்க்கை
குருடனாகவே நான்
வெளிச்சமாய் கடவுள்........

சுழற்சி.......


தீயாவதெல்லாம் ஒளியாவதில்லை
ஒளியாவதெல்லாம் தெளிவாவதில்லை
தெளிவனதெல்லாம் தீர்வாவதில்லை
தீர்வாவதெல்லாம் தீர்மானமில்லை....


தீர்மானமென்றும் தொடராவதில்லை
தொடர்கின்றயாவும் இடராவதில்லை
இடர்கின்றதெல்லாம் துயராவதில்லை
துயரங்களென்றும் முடிவாவதில்லை

முடிவானதெல்லாம் நிறைவானதில்லை
நிறைவானதெல்லாம் நிஜமானதில்லை
நிஜமானதெல்லாம் மனமேற்பதில்லை
மனமேற்பதெல்லாம் நிலையாவதில்லை


நிலையானதும் கூட நிழலாகிப்போகும்
நிழலானதாலே இரணமாகிபோகும்
இரணமாவதெல்லாம் அனுபவமாகிப்போகும்
அனுபவமானதெல்லாம் அறிவாகிப்போகும்

அறிவானதெல்லாம் அழகாகிபோகும்
அழகானதொல்லாம் அழிந்தேதான் போகும்
அழிவொன்றிருந்தால் பிறப்பொன்று தோன்றும்
பிறக்கின்ற யாவும் இறந்தேதான் போகும்......