
அவனை அடிக்கிறேன்
இவனை மிதிக்கிறேன்
பலரை விரட்டுகிறேன்
சிலரைத் துரத்துகிறேன் - இன்னும்
சிலரை வெறுக்கிறேன்
ஏனோ சிலரை துதிக்கிறேன்- பின்னும்
பலரை நிந்திக்கிறேன்....
எத்தனாய்,பித்தனாய்
இருக்கிறேன்னென்றால்...
சுத்தமாய் இல்லாத மனதாய்
சத்தமாய் சிரித்து மறைக்கிறேன்...
கற்றவனாய் மெத்த
படித்தவனாய் என்னை
காட்டிக்கொள்ளத் துடிக்கிறேன்
பிறர் என் மேன்மையை
கூறுகையில்
அமைதியாய் நகைக்கிறேன்
அதுதான் நிறைகுடத்திற்கு
அழகென்று நினைக்கிறேன்
ஆன்மீகம் முகம் கொண்டு
அன்பில் திளைக்கிறேன்
அதற்கொரு ஊறு நேர்ந்தால்
அமைதியாய் இருப்பதாய் நடிக்கிறேன்...
எழுத்துக்கே நான் அடிமை என்கிறேன்
எழுத்தெல்லாம் எனக்கடிமை என்கிறேன்
எழுதி எழுதி ஏட்டையும் கிழிக்கிறேன்
எழுத்தில் ஏற்றம் மட்டும் மறுக்கிறேன்.....
எதை எதையோ கிறுக்கி
எழுத்தென்றும், காவியமென்றும் அதை சிலாகிக்கிறேன்...
தொலைந்து போகும் வாழ்க்கையென்றாலும்
விரைந்து பறந்து வாழ்கிறேன்
என்னை தேடும் முயற்சியில்
பலரை தொலைத்து விடுகிறேன்
உறவை அறுத்து எரிகிறேன்
நட்பில் நஞ்சாய் மாறுகிறேன்....
சூன்யமாய் சூட்சுமமாய்
சூழ்ந்த கணங்களில்
குழப்பமாய் இந்த
கேள்விகள்.......
உண்மையில் நான் யார்?