படித்துப் படித்தே
மடிந்து போக
தருணமொன்று வாய்க்காதா?
மடிந்த பின்னும்
நம்மை படிக்க
இதயமொன்று வேண்டாமா?
கலைந்த கனவு,
இழந்த வாழ்வு,
தொலைத்த நிமிடம்,
என்று எண்ணியெண்ணி
ஏங்கிக் கிடக்கையில்
படித்தப் புத்தக
எண்ணிக்கை
எள்ளி நகையாடுகிறது என்னை!
பேச, நகைக்க, பார்க்க
நேரம் இருந்தது,
படிக்க வந்த போது மட்டும்
நேரம் இறந்தது!
படித்த உடனே
மறந்த புத்தகம்,
படித்துப் படித்துச்
சுவைத்தப் புத்தகம்,
படிக்க நினைத்து
வைத்தப் புத்தகம்
படித்தப் பின் இதயம் வெடித்து
அழுத புத்தகம்
படித்து விட்டு தலையில் அடித்து
கிழித்தப் புத்தகம்
இத்தனை புத்தகம்
கற்ற போதும்
கல்லாத புத்தக
வரிசை நீண்டு
கொண்டே போகிறது!
படிக்க வேண்டுமென்று
துடிக்கத் துடிக்க பேசிய
வார்த்தையெல்லாம்
செவியில் வந்து நின்று
பாடாய் படுத்துகிறது!
ஆயுள் குறையும் முன்னே
ஆன்மா பிரியும் முன்னே
இவற்றைப் படிக்கும்
தருணம் வாய்க்காதா?
No comments:
Post a Comment