நீ பல பொழுதுகளில்
எனக்கு பகையாய் இருக்கிறாய்!
உன்னை எனக்குப் பிடிக்கும்
ஆனால் உனக்குத் தான் என்னை பிடிக்கவில்லை. என் போதாத காலத்தில் நீ என்னை விட்டு விலகி விடுகிறாய். இப்பொழுதெல்லாம் நான் உன்னை அடிக்கடி தேடுகிறேன், இருப்பினும் நீ என்னை அலட்சியப்படுத்துகிறாய். உன்னை அணிய மறந்த பல தருணங்கள் நான் அல்லல்பட்டதுண்டு. சொல்ல வேண்டியதெல்லாம் கொட்டி விடும் பழக்கத்தினால் நான் உன்னை பெரிதும் விரும்புகிறேன் என்றே சொல்லவேண்டும். நான் மறந்தாலும் நீ என்னை மறவாமலிருத்தல் வேண்டும். பல வேளைகளில் உன்னை மறந்து, துறந்து விடுவதால் நான் பட்ட ரணங்கள் சாதாரணனானவையல்ல. அவை என்னை உன்பால் அன்பு கொள்ளத் தூண்டுகிறது. நீ என்னை தள்ளி, ஒதுக்கி விட்டு போனாலும், நான் உன்னை நெருங்கி வருவேன், முயற்சிப்பேன். என் முயற்சிகளை யார் முறியடித்தாலும் நான் முதலில் தேடும் கவசம் நீ தான். நான் தேட தொடங்கும் முன்னே நீ வருவதாகதெனினும், நான் தேட தொடங்கியப் பிறகேனும் என் அருகில் வரலாகாதா? எப்போதும் உன்னை என் சட்டை பையிலோ, முடிந்தால் உதட்டிலோ தான் பத்திரப்படுத்த முயல்கிறேன். என் செய்வது அது முடியாமல் போகையில் நான் மாய்ந்து போகிறேன். அப்போதெல்லாம் நீ எங்கோ தூரத்தில் நின்று கொண்டு என்னை பார்த்து ஏளனமாக மிக ஏளனமாக நகைக்கிறாய் என்பது மட்டும் சாஸ்வதம். அப்படி என்ன என்னோடு உனக்குப் பகை. என்னை வம்பில் விட்டு தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதில் உனக்கென்ன சுகம். வா தயவு செய்து வந்து விடு. என்னோடு இரு. எப்பொழுதேனும் அல்ல. இனி எப்போதும் நீ என்னுடனேயே இருந்து விடு. வாழ்க்கை வட்டம் என்னை வெளியே தள்ளுகிறது. வட்டத்திற்குள் இருக்க எனக்கும் விருப்பமில்லையாதலால் நான் இனி மெளனியாகிறேன். என்னை உன்னுள் புதைத்து விடு. இல்லை நானே உன்னுள் புதைந்து கொள்கிறேன். இதயத்தைப் பூட்டிக் கொள்கிறேன். இதயம் பூட்டப்பட்டால் தான் நீ வசப்படுவாய். என்னை வசந்தமாக்குவாய். மெளனம் ஆன்மாவை நிரப்பட்டும்.
No comments:
Post a Comment